Monday, April 26, 2010

'சடசட'வென மரங்கள் மண்ணில் சரிகையில் கதறல் கேட்கலையோ?


உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முன்னிட்டு, கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 60 கோடி ரூபாய் மதிப்பில் 72 இடங்களில் ரோடுகளை மேம்படுத்தும் பணி நடக்கிறது. கோவை நகரில் பல முக் கிய ரோடுகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. இப்பணிக்காக, அவசியமில்லாத இடங்களிலும் ஏராளமான பசுமை மரங்கள் தினமும் வெட்டிச்சாய்க்கப்படுகின்றன.

கோவை - அவினாசி ரோடு, திருச்சி ரோடு, கோவை விமான நிலைய ரோடு என ஏற்கனவே பல இடங்களில் ஆயிரக் கணக்கில் மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. அப்பகுதிகளில் நிழல் மாயமாகி அனல் பறக்கிறது. அடுத்து, மேட்டுப்பாளையம் ரோட்டில் 800 மரங்கள் வெட்டப்படவுள்ளன. உண்மையில், இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ரோட்டை அகலப்படுத்த தேவையான இடம் பற்றி, தேசிய அல்லது மாநில நெடுஞ்சாலைத்துறையினர் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கின்றனர்; அவர்களே இதற்கான இடத்தை அளந்து கொடுக்கின்றனர். அப்போது, அந்த இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கான அனுமதி தர வேண்டியதும் வருவாய் துறையினரின் பொறுப்புதான். மரங்களின் வயது, தரம், பயன்பாட்டை பொருத்து அதற்குரிய ஏலத்தொகையை வனத்துறை நிர்ணயிக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளும் பணிகளில் மட்டுமே, இந்த நடைமுறை கடை பிடிக்கப்படுகிறது. மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்படும் பணிகளில் பலவிதமான அத்துமீறல்கள் நடக்கின்றன. வருவாய்த்துறையிடம் பெற்ற அனுமதிக்கு மாறாக அதிக மரங்களை வெட்டவும், மிகவும் குறைவான விலைக்கு மரங்களை ஏலம் விடவும், மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அனுமதிப்பதாக புகார் கிளம்பியுள்ளது. மரத்தின் மதிப்பு குறைவு என்பது கூட, பெரிய பிரச்னையாக கருதப்படவில்லை.ஆனால், ரோடு விரிவாக்கத்துக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத பச்சை மரங்களை வெட்டிச்சாய்ப்பதே, பொது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், செம்மொழி மாநாடு மேம்பாட்டு பணிகளின் மீதே பலருக்கும் கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது.

மரங்களை அவசியமின்றி வெட்டுவதை தடுக்க சுற்றுச்சூழல் அமைப்புகள் முயற்சிக்கும்போது மரக்கொலை புரிவோரும், வருவாய்த்துறையினரும் கை கோர்த்துக்கொண்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மிரட்டுவதும் நடக்கிறது. சமீபத்தில், பச்சை ஆலமரத்தை அனுமதியின்றி வெட்டியதை கோவை 'ஓசை' அமைப்பினர் தடுத்துள்ளனர். அப்போது, அவர்களை தாக்க முயற்சி நடந்ததுடன், கோவை வருவாய் கோட்டாட்சியர் மிரட்டும் தொணியிலும் பேசியுள்ளார். இதேபோன்று, சுற்றுச்சூழல் அமைப்பினரின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் உதாசீனப்படுத்தி வருகின்றன.இதனால், மரம் வெட்டுவதற்கு எதிராக பொது மக்களே நேரடியாக களம் இறங்கிப் போராட ஆரம்பித்துள்ளனர்.

சிங்காநல்லூர், காமராஜர் ரோட்டில் பாலசுப்ரமணியம் மில் லைன் அருகே, அவசியமின்றி மரம் வெட்டியதை அந்த பகுதி மக்களே தடுத்துள்ளனர். ஆனால், நேற்றும் மரம் வெட்டும் அத்து மீறல் தொடர்ந்தது. பங்கஜா மில் ரோட்டில், ரோடு விரிவாக்கத்துக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத பல மரங்கள் நேற்று வெட்டி வீழ்த்தப்பட்டன. இதை கண்டித்து, பல்வேறு அமைப்பினரும் சேர்ந்து மரங்களுக்கு பால் ஊற்றி ஒப்பாரி வைத்து, ஆர்ப்பாட்டமும் நடத்தினர். நொய்யல் பசுமைக்கழகம், சமத்துவ முன்னணி, மாற்றம் அறக்கட்டளை, ராக் அமைப்பு, பாரம்பரியம், திருக்குறள் மாமன்றம் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள், வெட்டப்பட்ட மரக்கிளைகளை எடுத்து வந்து, கலெக்டர் அலுவலகத்திலும் நேற்று போராட்டம் நடத்தி மனுக் கொடுத்தனர். பொதுமக்களும், சுற்றுச்சூழல் அமைப்பினரும் சேர்ந்து போராட்டம் நடத்தினாலும், கோவையிலுள்ள அதிகாரிகள் யாரும் இதைப்பற்றி சிறிதும் அக்கறைப்படுவதே இல்லை.

இவ்வாறு மரங்களை வெட்டுவதே நகரில் வெப்பம் அதிகரிக்கக்காரணம் என்பதை உணர்வதுமில்லை. ஏனெனில் அதிகாரிகள் யாரும் ரோட்டில் நடந்தோ, டூ வீலரிலோ செல்வதில்லை. 'ஏசி'வசதி கொண்ட கார்களில்தான் பயணிக்கின்றனர். அவசியமின்றி மரங்களை வெட்டுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
நன்றி தினமலர்.....



எங்கள் வளங்களை அழித்து ....உலக தமிழ் மாநாடா ????
ஐயோ....ஐயோ....இந்த அரசியல்வாதிகளுக்கு இதுலும் ஆதாயம் தேட ,பணம் சம்பாரிக்க ஆசை ...... வெக்க கேடு .....

Tuesday, March 23, 2010

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி: இந்தியாவில் முதல் முறை: 33,000 மாணவர்கள் பயன்



கோவை : இரண்டு கோடி ரூபாய் செலவில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காலையில் இலவச சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, கோவை மாநகராட்சி அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது இந்த நூதன திட்டம்.



மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவ, மாணவியர் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள். பெற்றோர் அதிகாலையில் கூலி வேலைக்கு சென்று விடுவதால், பல குழந்தைகள் வெறும் வயிற்றுடன் பள்ளிக்கு வருவது, மாநகராட்சிக் கல்விக் குழுவின் ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையின் ஊட்டச்சத்து உணவியல் துறையிடம், இது தொடர்பான ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, மாநகராட்சி கேட்டுக் கொண்டது. ஆய்வு பணிக்காக, ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது. பல்கலை அளித்த அறிக்கையில், பெரும்பாலான மாணவ, மாணவியர் ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, அனைத்துப் பள்ளிகளிலும் காலை வேளையில் சிற்றுண்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



நேற்று சமர்ப்பிக்கப்பட்ட மாநகராட்சி பட்ஜெட்டில், இதற்காக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், நடைமுறைக்கு வந்தால், 85 மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 33 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் அடையும் வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படும் இத்திட்டம், மாநகராட்சி கவுன்சிலர்கள், பெற்றோர், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



மாநகராட்சிக் கல்விக்குழுத் தலைவர் கல்யாண சுந்தரம், இது பற்றி கூறுகையில், ''ஆறு மாதங்களாக இதுபற்றி ஆய்வு நடத்தி வந்தோம். ஆய்வில் மாணவர்களின் உடல் சார்ந்த சில குறைகள் கண்டறியப்பட்டன. மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ராவின் வழிகாட்டுதல், ஒத்துழைப்பு காரணமாக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதில், 33,000 மாணவர்களுக்கு தினமும் உணவு சமைக்க வேண்டும் என்பதால், எந்தவித சுகாதார சீர்கேடுகளும் நேராதவாறு கவனமாக நிறைவேற்ற வேண்டிய திட்டமாக உள்ளது. திட்டத்துக்கு அனுமதி கிடைத்தவுடன், அனைத்து கவுன்சிலர்களுடன் கலந்தாலோசித்து சிறப்பாக நிறைவேற்றுவது பற்றி முடிவு செய்வோம். வரும் கல்வியாண்டு முதல் நிறைவேற்றப்படும். மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் உடல் நலம் மேம்படும் என்பதால், படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவர்; மாநகராட்சிப் பள்ளிகளின் தரம் உயரும்,'' என்றார்.

---------