
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முன்னிட்டு, கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 60 கோடி ரூபாய் மதிப்பில் 72 இடங்களில் ரோடுகளை மேம்படுத்தும் பணி நடக்கிறது. கோவை நகரில் பல முக் கிய ரோடுகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. இப்பணிக்காக, அவசியமில்லாத இடங்களிலும் ஏராளமான பசுமை மரங்கள் தினமும் வெட்டிச்சாய்க்கப்படுகின்றன.
கோவை - அவினாசி ரோடு, திருச்சி ரோடு, கோவை விமான நிலைய ரோடு என ஏற்கனவே பல இடங்களில் ஆயிரக் கணக்கில் மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. அப்பகுதிகளில் நிழல் மாயமாகி அனல் பறக்கிறது. அடுத்து, மேட்டுப்பாளையம் ரோட்டில் 800 மரங்கள் வெட்டப்படவுள்ளன. உண்மையில், இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ரோட்டை அகலப்படுத்த தேவையான இடம் பற்றி, தேசிய அல்லது மாநில நெடுஞ்சாலைத்துறையினர் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கின்றனர்; அவர்களே இதற்கான இடத்தை அளந்து கொடுக்கின்றனர். அப்போது, அந்த இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கான அனுமதி தர வேண்டியதும் வருவாய் துறையினரின் பொறுப்புதான். மரங்களின் வயது, தரம், பயன்பாட்டை பொருத்து அதற்குரிய ஏலத்தொகையை வனத்துறை நிர்ணயிக்கிறது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளும் பணிகளில் மட்டுமே, இந்த நடைமுறை கடை பிடிக்கப்படுகிறது. மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்படும் பணிகளில் பலவிதமான அத்துமீறல்கள் நடக்கின்றன. வருவாய்த்துறையிடம் பெற்ற அனுமதிக்கு மாறாக அதிக மரங்களை வெட்டவும், மிகவும் குறைவான விலைக்கு மரங்களை ஏலம் விடவும், மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அனுமதிப்பதாக புகார் கிளம்பியுள்ளது. மரத்தின் மதிப்பு குறைவு என்பது கூட, பெரிய பிரச்னையாக கருதப்படவில்லை.ஆனால், ரோடு விரிவாக்கத்துக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத பச்சை மரங்களை வெட்டிச்சாய்ப்பதே, பொது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், செம்மொழி மாநாடு மேம்பாட்டு பணிகளின் மீதே பலருக்கும் கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது.
மரங்களை அவசியமின்றி வெட்டுவதை தடுக்க சுற்றுச்சூழல் அமைப்புகள் முயற்சிக்கும்போது மரக்கொலை புரிவோரும், வருவாய்த்துறையினரும் கை கோர்த்துக்கொண்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மிரட்டுவதும் நடக்கிறது. சமீபத்தில், பச்சை ஆலமரத்தை அனுமதியின்றி வெட்டியதை கோவை 'ஓசை' அமைப்பினர் தடுத்துள்ளனர். அப்போது, அவர்களை தாக்க முயற்சி நடந்ததுடன், கோவை வருவாய் கோட்டாட்சியர் மிரட்டும் தொணியிலும் பேசியுள்ளார். இதேபோன்று, சுற்றுச்சூழல் அமைப்பினரின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் உதாசீனப்படுத்தி வருகின்றன.இதனால், மரம் வெட்டுவதற்கு எதிராக பொது மக்களே நேரடியாக களம் இறங்கிப் போராட ஆரம்பித்துள்ளனர்.
சிங்காநல்லூர், காமராஜர் ரோட்டில் பாலசுப்ரமணியம் மில் லைன் அருகே, அவசியமின்றி மரம் வெட்டியதை அந்த பகுதி மக்களே தடுத்துள்ளனர். ஆனால், நேற்றும் மரம் வெட்டும் அத்து மீறல் தொடர்ந்தது. பங்கஜா மில் ரோட்டில், ரோடு விரிவாக்கத்துக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத பல மரங்கள் நேற்று வெட்டி வீழ்த்தப்பட்டன. இதை கண்டித்து, பல்வேறு அமைப்பினரும் சேர்ந்து மரங்களுக்கு பால் ஊற்றி ஒப்பாரி வைத்து, ஆர்ப்பாட்டமும் நடத்தினர். நொய்யல் பசுமைக்கழகம், சமத்துவ முன்னணி, மாற்றம் அறக்கட்டளை, ராக் அமைப்பு, பாரம்பரியம், திருக்குறள் மாமன்றம் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள், வெட்டப்பட்ட மரக்கிளைகளை எடுத்து வந்து, கலெக்டர் அலுவலகத்திலும் நேற்று போராட்டம் நடத்தி மனுக் கொடுத்தனர். பொதுமக்களும், சுற்றுச்சூழல் அமைப்பினரும் சேர்ந்து போராட்டம் நடத்தினாலும், கோவையிலுள்ள அதிகாரிகள் யாரும் இதைப்பற்றி சிறிதும் அக்கறைப்படுவதே இல்லை.
இவ்வாறு மரங்களை வெட்டுவதே நகரில் வெப்பம் அதிகரிக்கக்காரணம் என்பதை உணர்வதுமில்லை. ஏனெனில் அதிகாரிகள் யாரும் ரோட்டில் நடந்தோ, டூ வீலரிலோ செல்வதில்லை. 'ஏசி'வசதி கொண்ட கார்களில்தான் பயணிக்கின்றனர். அவசியமின்றி மரங்களை வெட்டுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
நன்றி தினமலர்.....

எங்கள் வளங்களை அழித்து ....உலக தமிழ் மாநாடா ????
ஐயோ....ஐயோ....இந்த அரசியல்வாதிகளுக்கு இதுலும் ஆதாயம் தேட ,பணம் சம்பாரிக்க ஆசை ...... வெக்க கேடு .....

No comments:
Post a Comment