
கோவை : சூலூர்-மேட்டுப்பாளையம் பை-பாஸ் ரோடு அமைக்க, ரூ. 558 கோடியை மத்திய அமைச்சரவை ஒதுக்கியிருப்பதால், விரைவில் பணிகள் துவங்கவுள்ளது. கோவை வழியாகச் செல்லும் சேலம் - கொச்சி (என்.எச்., 47), நாகை-கூடலூர் (என்.எச்., 67) ஆகிய இரு சாலைகளும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. திண்டுக்கல்-சத்தியமங்கலம் ரோடு (என்.எச்., 209) மட்டுமே, தேசிய நெடுஞ்சாலைத் துறை வசம் உள்ளது.
மாநில நெடுஞ்சாலைத் துறை ரோடுகளை விட, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ரோடுகள் மிக மோசமாக இருப்பதால், கோவை மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக, என்.எச்., 67 நெடுஞ்சாலையில் திருச்சி ரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ரோட்டின் நிலை படு மோசமாக இருந்தது.
இதனால், பல விபத்துக்கள் ஏற்பட்டு, பல போராட்டங்களும் நடந்துள்ளன. சாலை பாதுகாப்புக் குழுக் கூட்டத்திலும் இது பற்றி தொடர்ந்து புகார்கள் குவிந்தன. கடந்த மாதம் நடந்த கூட்டத்தில், தற்காலிக சீரமைப்புப் பணி மேற்கொள்வதாக, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் உறுதி கூறினர். இருப்பினும், வழக்கம் போல வேலை நடக்காது என்றே பொது மக்கள் தரப்பில் பேச்சு எழுந்தது. ஆனால், கலெக்டர் பழனிகுமாரின் தொடர் நடவடிக்கையால், இந்த பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன.
கோவை சிந்தாமணிப் புதூரிலிருந்து மேட்டுப்பாளையம் வரையிலான 52 கி.மீ., தூரத்துக்கு "பேட்ச் ஒர்க்' மற்றும் தார் ரோடு அமைக்க, 2 கோடியே 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில், கோவை - திருச்சி ரோட்டில் ஸ்டாக் எக்சேஞ்ச் பகுதியிலிருந்து ஒண்டிப்புதூர் வரையிலும் இருந்த ஆபத்தான குழிகள் மூடப்பட்டுள்ளன. அதே போன்று, துடியலூர் வரையிலுமான ரோட்டிலும் ஆங்காங்கே இந்த "பேட்ச் ஒர்க்' மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் நகர பகுதியில் 4 கி.மீ., தூரத்துக்கும், வடகோவை சிந்தாமணியிலிருந்து சாய்பாபா கோவில் வரையிலுமான 4 கி.மீ., தூரத்துக்கும் "பேட்ச் ஒர்க்' செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.
இவற்றைத் தவிர்த்து, மொத்தம் 12 கி.மீ., தூரத்துக்கு முற்றிலுமாக ரோடு முழுவதும் தார்ச்சாலை அமைக்கவும் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதியில் நடந்து வந்த விபத்துக்கள் குறையுமென்று ஆணைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டை நான்கு வழிச்சாலையாக்கும் பணியும் விரைவில் துவங்குமென்று ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. அதற்கு முன், சூலூரிலிருந்து மேட்டுப்பாளையம் வரையிலான பை-பாஸ் ரோடு பணி துவங்கி விடுமென்று தெரிகிறது. இதற்காக 558 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பை-பாஸ் ரோடுக்கான விரிவான திட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்டு, இந்த நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதனால், விரைவில் "டெண்டர்' விடப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூலூரிலிருந்து நீலம்பூர் வழியாக நரசிம்மநாயக்கன் பாளையம், பெரியநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில், தலா 2 கி.மீ., தூரம் கடந்து செல்லும் வகையில் இந்த பை-பாஸ் ரோடு அமைக்கப்படவுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர் ராமநாதன் கூறுகையில், ""மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும், நிதியும் கிடைத்து விட்டதால், சூலூர் - மேட்டுப்பாளையம் பை-பாஸ் ரோடு அமைக்கும் பணி மிக விரைவில் துவங்கப்படும்,'' என்றார். நீண்ட காலமாக, ஆமை வேகத்தில் செயல்பட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பார்லிமென்ட் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திடீரென சுறுசுறுப்படைந்துள்ளது.
-------------நன்றி தினமலர் ---01/01/2009---------------------



